Tuesday, December 30, 2014

ஒரு மரணத்தின் பின் விளைவுகள்

புறமோ
அகமோ
எது செத்தாலும்
சாவு சதா
ரணத்தை தருகிறது
என என் அகம் சாகடிக்கப்பட்ட ஒரு நாளில் எழுதிய வரிகள் மனதுள் வந்து போகின்றன. அகத்தின் நோவுகளை பெரிதாய் எண்ணி இருந்த எனக்கு, புறத்தின் சாவு ரணத்தை புரிய வைத்தது அப்பாவின் மரணம் நவம்பர் 12, 2013.
அதற்கு ஒரு மாதம் முன்பு தான், மரணத்தின் முன் ஏற்பாடுகள் என்ற ஆர்.எஸ்.பாலமுருகன் அவர்களின் கீழ்க்கண்ட கவிதையை ஒரு வலை தளத்தில் படித்தேன்.
****************************************************

ராத்திரி தாண்டுவது கஷ்டமென
வைத்தியர் சொல்லிப் போனதும்
மரணத்தின் மாய வலை
விரியத் தொடங்கியது
வீட்டில்
அம்மாவும் அக்காவும்
அவசரமாய் குழந்தைகளைச்
சாப்பிடவைத்தார்கள்
தகவல் சொல்லப்பட
வேண்டியவர்களின்
தொலைபேசி எண்களைத்
தேடத் தொடங்கினார்கள்
அப்பாவும் பெரியண்ணனும்
பீரோவைப் பூட்டி
சாவியைப் பத்திரப்படுத்துவதும்
எளிதில் திருடு போகக்கூடிய
விலையுயர் பொருட்களைப்
பாதுகாப்பதுமென
ஏதேனும் வேலை இருந்தது
எல்லோருக்கும்
‘எல்லாத்துக்கும் முன்னே நின்னு
காசைக் கரியாக்காதீங்க’ என
சின்ன அண்ணனை
எச்சரிக்கத் தவறவில்லை
சிக்கன சின்ன அண்ணி
எதிர் வீட்டு கோபாலை அழைத்து
வாசலில் டியூப்லைட் மாட்டப்பட
தூக்கம் வராத அக்கம் பக்கத்தினர்
திண்ணையில் அமர்ந்து
முன்னம் நிகழ்ந்த
பல மரணங்கள்பற்றி
முணுமுணுத்துக்கொண்டு
இருந்தார்கள்
தப்படிக்கும் சின்னானும்
பந்தல் போடும் ஆறுமுகமும்கூட
முன்தொகை வாங்கிப் போன பின்
நிகழ்வின் சோகம்போல்
மழை பெய்யத் தொடங்க…
இனி நிகழ வேண்டியது
தாத்தாவின் இறப்பு மட்டுமே
*****************************************************
என் அப்பாவின் மரணமும் ஏறக்குறைய அம்மாதிரியானதே! தாத்தாவிற்கு பதில் அப்பாவையும், ஒரு நாள் என்பதை 2 வாரம் என திருத்தி அமைக்க வேண்டி இருக்கும்.
என் அப்பாவிற்கான மரணமும் ஊர்ஜித படுத்த பட்டு இருந்தது. சுற்றிலும் ஏதேதோ வகையிலான முன்னேற்பாடுகளுடன்.
மரணத்தின் நொடியின் வலியோ , வேதனையோ எப்படி இருக்கும்? எப்படி அதை அப்பா கடந்து இருப்பார் ? – என ஒன்றும் யோசிக்க முடியாத ஒரு சூழலில் உயிர் பிரிந்தது என்ற செய்தி காதில் எட்டியது.
மேற்படி காரியங்கள் நடந்து முடிந்தன.
மரணம் தொடர்ந்த பத்து நாட்கள் … நடக்கும் சாங்கியங்களும், சம்பிரதாயங்களும் நம்மை திசை திருப்பி துக்கத்தை விட கடமைகளுக்கு முன்னுரிமை தர தூண்டுகின்றன.என்ன துக்கம் கேக்க வேண்டுமோ ..வலியை பகிர வேண்டுமோ எல்லாவற்றையும் அந்த பத்து நாட்களுக்குள் முடியுங்கள்.
மரணத்தின் வலியை,வேதனையை உணர்ந்து , மனதுடன் பேசும் நமக்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கும் வரை , அது ஒரு நிகழ்வாகவே மனதுள் செல்கின்றது. அந்த நிகழ்வின் தாக்கங்களும் விளைவான பாதிப்புகளும் , நாட்கள் நகர நகரத்தான் பாரமாகி போகின்றது.
சற்று மனம் திசை திரும்பி சகஜ நிலைக்கு வர முயற்சிக்கும் தருணங்களில், உங்களின் துக்கம் விசாரிக்கும் அலைபேசி அழைப்போ , நேர் சந்திப்போ தவிர்க்கப்படலாமே.
அடியில் இருந்து கிளர்ந்து எழும் எண்ணங்களை மீண்டும் புதைக்க குறைந்தது ஒரு வாரம் ஆகி விடுகிறது. .. இடையில் இன்னொரு துக்க விசாரிப்பு நிகழாத வரை..
உங்களால் முடிந்தால் .. அழுகை நிறுத்தி, இன்னும் இருந்து இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனைகளை நிறுத்தி , ஒரு கடிதமாகவோ, ஒரு குறிப்பாகவோ ,இறந்தவர்களின் நற்பண்புகளை எழுதி வைத்து மெளனமாக துக்கம் அனுசரிப்போமே !
ஒரு மூன்றாவது மனிதனாய் மரணத்தை அணுகும் போது , வரும் எண்ணங்களும் செயல்களும் இப்படி தான் அமைகின்றன.
  1. நம் வீட்டு நபர்களுக்கு முதலில் செய்தியை இன்று சொல்லலாமா இல்லை நாளை குளிக்கும் முன் சொல்லலாமா ? – ஒரே குளியலாய் போய் விடும்
  2. பத்துக்கு போக முடியுமா? காலை குளியல் முன்பு துக்கம் கேட்டு விட வேண்டும்.
  3. துக்கம் கேட்பது பத்து நாளுக்குள் முடியவில்லை. ஒரு நாள் கேட்டுட்டு வந்துடனும் இல்லையெனில் மரியாதையாய் இருக்காது.
  4. சாப்பிட்டு போய் விடலாம். பாடி எடுக்க நேரம் ஆனா என்ன செய்வது?
  5. எனக்கு சுகர் .. பி பி. .. ஒரு வாய் சூடா காப்பி கிடச்சா தேவலை. இதை கூட ஏற்பாடு பண்ணல இவங்க.
  6. தாலி துக்கமா – மஞ்சள் கொண்டு போகணும் மறக்காம.
  7. இவர் போயிட்டாரே . உயில் இருக்கா ? இவங்க குடும்பம் எப்படி சொத்து பிரிப்பாங்க?
  8. இந்த பணத்தால சண்டை வருமா? சுமூகமா பிரிக்க படுமா? நமக்கு இதுல சம்பந்தம் இல்லனாலும் இருந்தாலும் , பொது அறிவு வளர்த்துக்கறது அவசியம் ஆகுது.
இதை எல்லாம் மீறி , ஐயோ அவர் போயிட்டாரே ! பாவம் அவங்க குடும்பம் என்ற எண்ணம் வருவது சில மனித துளிகளுக்காய் இருக்கும்.
மாறாக, இழந்தவர்களுக்கு , இழப்பு தான் முதலாகவும், வந்தவர்களின் பராமரிப்பும், அவர்களின் கேள்விகளுக்கான பதில்களும் ரெண்டாம் பட்சமாகத்தான் தெரிகிறது.
எப்படி இப்படி ஆச்சு?
நோய் ல கஷ்ட பட்டார். இறந்துட்டார். ..
என்ன நோய் ?
கன்சர்
ஓஹோ.. என்ன கன்சர்
ப்ரோஸ்டேட் கன்சர்.
ஆஹா.. கீமோ தந்தீங்களா?
என்பதான விசாரிப்புகளில் தான் ஆரம்பிக்கும்.
இப்படி பொது அறிவை வளர்த்து என்ன செய்ய போறீங்க? அடுத்த சாவு வீட்டுல உக்காந்து பேச ஒரு விஷயம் கைல கிடைக்கும். என்ன பேசறது எப்படி கேக்கறது தெரியவில்லை என்ற விதத்தில் தயவு செய்து மௌனமான அஞ்சலி செலித்திட்டு போங்க. வெறும் வாய்க்கு அவுல் கிடைச்சதா பாவிச்சு , ஏதும் மென்னு துப்பி மனசை அழுக்காக்க வேண்டாமே!
இன்னொரு விஷயம்.. நான் செய்த அதே மூட தனத்தை நீங்களும் செய்யாதீர். என் நண்பர்கள் அல்லது உறவுகளின் நெருங்கிய சொந்தம் இறந்து இருந்தால், அவர்களை குறைந்தது 6 மாத காலம் நான் தொடர்பு கொள்ள மாட்டேன். அவர்களின் துக்கம் குறையட்டும் என்ற நினைப்பில்.
உண்மையில் என் அப்பா தவறியதன் பிறகு தான் நான் இழந்த எண்ணத்திலிருந்து விடு பட வேறு செய்திகளும்,வேறு சூழலின் தேவையும் புரிந்தது.
துக்க விசாரிப்பு என்ற சம்பிரதாய தொடர்பு முடிந்தவுடன், யார் முதலில் தயக்கத்தை உடைத்து பேசுவது என்றில்லாமல், சகஜமாய் ஒரு அலைபேசி எடுத்து உங்கள் வாழ்க்கை விஷயங்களை பகிர தொடங்கலாம். இழந்தவரிடம் அந்த இழப்பு பற்றி மட்டுமே பேச வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர்கள் சகஜ நிலைக்கு மீண்டு வர உங்களின் அழைப்பு தேவை படலாம். வெறும் துக்கம் கேக்க மட்டும் அல்ல தொலைபேசியும் நேர் சந்திப்புகளும்.
என் வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளை பார்த்த பிறகு, என் மரணத்தின் பின் ஏற்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என மனதில் ஊர்ஜிதப்படுத்தி கொண்டேன். இந்த பதிவின் முக்கிய நோக்கமும் இதை தெரிவிப்பதுதான்.
என் வாழ்நாளிலேயே முக்கிய நபர்களின் பட்டியல் அவர்களின் தொடர்பு தகவல்களோடு தயாரிக்கப்பட்டு என் ஒரு உறவு மற்றும் ஒரு நண்பரிடம் கொடுக்கப்படும். என் மரணத்தின் செய்தி கண்டிப்பாக இவர்கள் காதுகளை அடைய வேண்டும் என்ற கோரிக்கையுடன்.
என் மரணத்திற்கு வந்து போவோர் தன் மன ஓட்டங்களை பதிவு செய்து போக ஏதுவாக சில காகிதங்களும் எழுதுகோலும் வைக்க பட்டிருக்கும்.
எல்லாம் முடிந்ததும் , உறவுகளோ நண்பர்களோ என் இழப்பை நினைந்து வருந்தும் போது ,அந்த குறிப்புகளை படித்து கொள்ளலாம். மீண்டு வர முயற்சிக்கும்போது , அவற்றை மூட்டை கட்டி ஓரம் ஒதுக்கலாம்.
தன் விருப்பத்திற்கு ஏற்ப என் நெருங்கிய உறவுகளோ, நட்பு வட்டமோ அவரவர் மன நிலையை ஆள முடியும். அடுத்தவரின் அலை பேசியோ , வரவோ அவர்களை பாதிக்க வேண்டாம்.
இதன் சாத்தியகூறுகளை ஆராய முயல வில்லை நான். நானே போன பிறகு இப்படித்தான் என் உலகம் இயங்க வேண்டும் என்ற என் கோரிக்கை நிறைவேற்ற பட்டதா என்பதை உறுதி செய்ய அவசியம் இல்லை. என் எண்ணம் இதுவென பதிவு செய்கிறேன்.
 

Friday, December 19, 2014

தடயம்

அடி வரை
கிளறாமல்
கொட்டி
மூடியாயிற்று

மசாலா
தூக்கலாய்
மாற்று சுவை
தந்தாயிற்று

அடி பிடித்த
சுவடு இல்லாமல்
அலம்பியும்
கவுத்தாயிற்று

ஒவ்வொரு வாய்
சுவைக்கும் போதும்
கரிந்த வாசனை
கண்டுகொள்ள துடிக்கும்
மனத்தை என்ன செய்ய?
 

Tuesday, December 9, 2014

வரலாறு

நின்று
நிதானித்து
ஊடுருவி
புரட்டி
தூசு தட்டி 
கடைசியாய்
கிடைத்தது

எதிர்பார்ப்பும்
ஏமாற்றமுமாய்
வருத்தமும்
வேதனையுமாய்
வாழ்த்தும்
நன்றியுமாய்
புன்னகையும்
சிரிப்புமாய்
பாட்டும்
கூத்துமாய்
ஏறக்குறைய
பத்து ஆண்டுகள்

புரிதலுடன்
நட்புமாய்
இன்றும்
தொடர்ந்து கொண்டு


 

Tuesday, December 2, 2014

தொடர்பு


உங்களுடன்
பேசும்போது
சுயம்
உயிர் பெறுகிறது

இயல்பு
வெளிப்படுகிறது
நான் நானாகவே
இருக்கிறேன்

ஆணித்தரமாக
இதை உணர்வது
அவ்வப்போது
அவசியமாகிறது

பின் குறிப்பு : நீண்ட காலமாய் என்னுடன் சேர்ந்து பயணிக்கும் நட்பு வட்டத்திற்காய் இந்த படைப்பு