Wednesday, May 16, 2012

நான் படித்த புத்தகம்

மே 6, 2012,
சென்னை

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது - வைக்கம் முகம்மது பஷீர்
தமிழில்    : குளச்சல் மு. யூசுப் ,
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்


என் படிப்பார்வத்தை , என் ரசனையை உணர்ந்த என் தம்பி படிக்க கொடுத்த புத்தகம். கிட்டத்தட்ட 15 நாட்கள் எடுத்துக்கொண்டேன். இத்தனைக்கும் இது ஒன்றும் "யவன ராணி" நாவல் போல் அதிக பக்கங்கள் இல்லை. வெறும் 111 பக்கங்கள்தான். யவன ராணி படித்து முடிக்கவும் 10 முதல் 15 நாட்கள் தான் ஆயின. அதை விரைவாக படித்து முடித்தமைக்கு தமிழ் சுவையும், கற்பனை திறமும், இயற்கை வர்ணனையும் கதையின் விறுவிறுப்பும் காரணமாக பட்டது.


மேற்கூறிய காரணங்களால் " எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது "- இந்த கதை விறுவிறுப்பு அற்றது என்று எண்ணி விட கூடாது. மிகவும் சுவாரஸ்யமான கதை இது. குழந்தையின் கையில் கிடைத்ததோ ஒரு சாக்லேட். நீண்ட நேரம் நக்கி நக்கி அதன் சுவையை ரசிப்பது போல் எத்தனை வேகமாக படிக்கும் ஆற்றல் இருந்தாலும் ஒவ்வொரு பக்கத்தையும் மிக மெதுவாக நகர்த்தினேன். ஐயோ ! பக்கங்கள் தீர்ந்து விடுமே என பாதி நக்கிய சாக்லேட்- ஐ மீண்டும் உறையில் வைத்து மூடி வைத்த குழந்தையின் நிலை எனக்கும் வந்தது. ஒவ்வொரு நக்குதலுக்கும் கரைத்து விடாமல் பாதுகாக்கும் எண்ணம் மேலோங்கியது.


மிக எளிய நடை. பல பதங்கள் இஸ்லாம் மதத்துக்கே உரித்தானது. அதை அவ்வண்ணமே எழுதி இருப்பது மிக அழகு. வாசிப்பவர்களின் வசதிக்காய் அந்த வார்த்தைகளின் பொருளை கீழே குறித்து காட்டி இருப்பது பாராட்டுக்குறியது. இன்று புத்தகத்தை படித்து முடித்து விட்டேன். என்னுள் எதையோ எழுத வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி உள்ளது. அது புத்தக விமர்சனமா இல்லை என் எண்ண ஓட்டத்தை எழுத்தாகும் முயற்சியா என விளங்கவில்லை. விளங்கிக்கொள்ளவும் ஒரு முடிவிற்கு இழுத்துச்செல்லவும் மனம் இல்லை.


மனம் ரம்மியமான நிறைவான நிலையில் உள்ளது. மகிழ்ச்சியின் இந்த கணத்தை பதிவாக்க முயற்சி அவ்வளவே! இந்த கதையின் சம்பவங்கள் சில என் வாழ்க்கையுடன் இணைந்திருப்பதாக உணர்கிறேன். என் வீட்டிலோ, என் அண்டை வீட்டிலோ மிக அருகில் நான் பார்த்து கடந்தவைகளாக பட்டது. உதாரணத்திற்கு , மீன் வாடை ஒரு முஸ்லிம் வீட்டில் அடிக்க கூடாது. முஸ்லிம் என்பவன் மிகவும் சுத்தமுள்ளவனாக இருக்க வேண்டும் - என்ற வரிகள் என்னை பால்ய காலம் நோக்கி இழுத்து சென்றன.


எங்கள் அண்டை வீட்டில் ஒரு முஸ்லிம் குடும்பம் இருந்தது. அந்த வீட்டில் மீன் அல்லது கவிச்சி வாடை வந்து நான் அறிந்தது இல்லை. அவ்வளவு சுத்தமாக வைத்து இருப்பார்கள். அங்கு பாத்தியா ஓதும் காட்சி, அங்கு தரும் இனிப்பு பண்டம், சிறு வயது விளையாட்டு, ஐஸ் பாய்ஸ்..என் ரேங்க் கார்டு அவர்கள் வீட்டு சாக்கடையில் தவறி விழுந்தது.. என பல நினைவுகள் ஒரு சேர வந்து போயின.


என் அருகில் நடக்கும் விஷயங்களாய் சித்தரிக்கப்பட்டு ஒவ்வொரு நிகழ்ச்சியும் என் எண்ணங்களை தூண்டி என்னை அதிலே திளைக்க வைத்ததாலோ என்னவோ இந்த புத்தகத்தை படித்து முடிக்க அதிக நேரமும்.. முடித்த பின்னும் மன நிறைவும்.. நெகிழ்ச்சியும் விஞ்சி நிற்கிறது.


இந்த புத்தகத்தை படிக்க தந்தவன் என் தம்பி என்றேன். அவன் என் ரசனையை நன்கு உணர்த்த நல்ல நண்பன். அவனுக்கும் எனக்குமான உரையாடல் தமிழை மிகவும் நெருக்கமாக கொண்டு வரும். நான் எழுதும் கவிதைகளை ( !??) அவனிடம் பகிர்ந்து கொண்டால் எங்கள் உரையாடலின் முடிவில் அது வேறு பரிமாணம் கொள்ளும். எழுதி பழகலாமே ! என்ன ஆகி விடும் என்ற தைரியத்தை கொடுத்தவன். அவன் எழுத்தாற்றல் மிக்கவன். அவன் கருத்தாழமிக்க கவிதைகளின் முன் நான் சிறு பிள்ளை. வயதால் சின்னவன் என்பதால் அக்கா என்ற அங்கீகாரத்தில் அவனை அதிகாரம் செய்வதில் மகிழ்வுறுகிறேன்!


பல சமயங்களில் எங்களின் கருத்து பரிமாற்றத்திற்கு நேரம் தடையாக இருக்கும். அவர் அவர்களுக்கான முக்கியத்துவங்களும், காலச்சூழலும் , வாழ்க்கை ஓட்டத்தில் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களை குளிர் சாதன பெட்டியில் வைப்போம் என விளையாட்டாய் சொல்லி கொள்வோம். ஏனோ இன்று வரை அதில் அடுக்கி வைத்த எந்த பொருளையும் எடுத்து பார்க்கவில்லை. அதில் எவ்வளவு இதுவரை அடைத்து உள்ளோம் என்ற விவரங்களும் இல்லை. என்றாவது ஒருநாள் அதை திறக்கும்போது வைத்த நிலையில் இருக்குமா இல்லை சுவடின்றி பனியால் உறைந்து விரைத்து பயனற்று போகுமா தெரியவில்லை.

அப்படி ஒரு நிகழ்வாக இந்த புத்தகம் படித்த அனுபவம் இருந்து விட கூடாது என்பதால் .. இதை இங்கு பதிவு செய்து வைக்கிறேன். அடையாளம் இல்லாமல் .. அழிந்து போகாமல் காப்பதற்காக! :-)

Monday, March 26, 2012

நிறைவு

ஒன்று
இரண்டு
மூன்று
ஆசையாய் அடுக்கினேன்

பகிர்ந்து கொள்ள
ஒன்றை
உருவினேன்


எல்லாம்
சரிந்து
நொறுங்கின

வெறுமை
கைகளை
நிரப்ப
நிறைவடைந்தேன்

Tuesday, March 20, 2012

ஷ்ரியா ஜனனம்

மின்னல்
இடி
புயற்காற்று
பெருவெள்ளம்

வழக்கமான
அறிகுறிகள்
ஏதுமின்றி

இளங்காலை
சின்னஞ்சிறு பனித்துளி
ஆனந்த கண்ணீர்
அகிலம் விரிந்தது