Tuesday, November 10, 2009

வாழ்க்கை

அடித்து புரட்டி
வலி
உணர்த்தியது

கண்ணைக் கசக்கிட
வழி
காட்டி சிரித்தது

Saturday, October 31, 2009

தவம்

கிழித்து சென்றது
காற்று

எட்டி பார்க்க
எத்தனித்த என்னை
இழுத்து சென்றது
இயற்கை

மரத்தின்
தனிமையை மதித்து
விடுமுறை அளித்தன
இலைகள்


சுமைகள் நீங்கிய மகிழ்ச்சியில்
மௌனமாய்
விண்ணை நோக்கி
தவம் இயற்ற தலைப்பட்டது மரம்

Saturday, July 25, 2009

எச்சம்

கையில் கிடைத்த
சொற்களை சேகரித்தேன்

வேண்டும் வேண்டாம்
என ஒதுக்கிய முடிவில்
நானும் நிகழ்வும்
மட்டும் கவிதையாய்

Friday, July 24, 2009

அரவணைப்பு

நடை பயணம்
நடுக்கத்தில் நான்

தன் கை
நீட்டியது மழை

அகம் குளிர
வீடு சேர்ந்தேன்

Wednesday, July 15, 2009

தவிர்த்தல்

கட்டாயத்தில்
காக்கும்
உரிமை
கைவசமானது

சொந்தமில்லா
பொருளுக்கு
விலை
பேசப்பட்டது

காக்க மட்டுமே
தெரிந்த என் அறியாமை
காண்போரின் கேள்விகளில்
வெளிப்பட்டது

சோதனை முடிவை
உரிமையாளனிடம்
அறிவிப்பதாய் சொன்னவரை
வீட்டிற்கு அழைத்தேன்

பிறிதொரு சமயம்
என்றார்
புன்னகைத்து
விடை தந்தேன்

பார்வையாளர்கள் வரவும்
புன்னகையுடனேயான
விடை பெறலும்
மீண்டும் தொடரலாம்

குறைந்த பட்சம்
வீட்டிற்குள் வரவேற்கும்
கட்டாயமேனும்
தவிர்க்கப்படலாம்

Tuesday, June 9, 2009

வேண்டுதல்

நேரில் பார்க்கவில்லை இறைவா - ஆயினும்
நேசம் குறையவில்லை உன்னிடம்
காசு பணம் வேண்டாம் - உடன் பேச
காகிதம் இது போதும்

எண்ணங்கள் அலைமோதும் போது - அதை
எழுதிடும் திறன் வேண்டும் - இன்பம்
என்றோ வரும் என்று
எதிர்பாரா நிலை வேண்டும்

இன்ப துன்பம் பகிர்ந்து கொள்ள
இனிய தமிழ் வேண்டும் - இறைவா
உன்னிடம் நான் பேச
கொஞ்ச நேரம் ஒதுக்க வேண்டும்

Monday, May 25, 2009

ஒவ்வொரு முறையும்

மனதில்
ஒரு கலக்கம்

அருகில் வந்தால்
எப்படி
தவிர்ப்பது

குழப்பத்தில்
நின்ற என்னை
கவனிக்காமல் போனதும்
நிம்மதி பெருமூச்சில் நான்

பின் குறிப்பு

நடை பாதையில்
என்னை கடந்தன
பழகிய நாய்கள்

Monday, May 11, 2009

சுயத்தின் சுகம்

முன்பே செய்த
ஒத்திகை தான்
இன்று அதன்
ஒப்பாரி மட்டுமே

புறமோ
அகமோ
எது செத்தாலும்
சாவு சதா
ரணத்தை தருகிறது

தலை குப்புற விழுந்து
நிலை குலைந்து
தட்டு தடுமாறி
என் சுயத்தில்
எழுந்து நின்றேன்

சுயத்தின்
சுகம் மீறி
மனம்
வெடித்து சிதறியது

பிறரின்
சுயம் மட்டும்
ஏனோ
சுகிக்க முடிவதில்லை...

Wednesday, April 29, 2009

பார்வைகள்

உலர்ந்த பசை
ஒட்ட வைக்க
எச்சில் தொட்டேன்

வேலை முடிந்தது
மகிழ்ச்சி

ஏனோ வேடிக்கை
பார்த்த ஒருவன்
அருவெறுப்பில் நெளிந்தான்

Sunday, April 26, 2009

அவசரமாய் ...

பிறரின்
நெற்றிச் சுருக்கத்தை
தீர்ப்பதற்காய்
முகமூடி அணிகிறேன்
அவசரமாய்

என்
தற்காப்பிற்கு அல்ல
அடுத்தவரின்
திருப்திக்காய்

தோட்டக்காரரின்
திருப்திக்காய்
வளர்ந்த மரம்
அணிந்த முகமூடி

அவன் போட்ட
வேலியின் பாதுகாப்பில்
தான்
இன்னும் இருப்பதாய்

ஏதோ
வேலிக்குள் இருக்கும்
சாலையோர
மரங்களில்

பெற்றோர் சொல்லை
இன்றும் கேட்கும்
வளர்ந்த மகனின்
பிம்பம்

Thursday, April 9, 2009

பற்றுதல் வேண்டாம்

வாழ்க்கை ஓட்டத்தின் நடுவே வரும்
சிந்தனை ஓட்டத்தை பதிவு செய்தே பழகிய நான்
வழக்கத்துக்கு மாறாய் சிந்திக்க என
நேரம் ஒதுக்கி பதிவு செய்யும் முதல் முயற்சி

இயல்பு மாற்றம் கொஞ்சம் கடினமே

மனதின் தாக்கத்தை எழுதி, பின் பெயரிட்டே பழக்கம்
மாறாய் பெயரிட்டு , பிறகு எழுத ஏனோ தயக்கம்

என் சிந்தனை , என் எழுத்து , எனக்காய் என்ற நிலை மாறி
எண்ண ஓட்டங்களை சீர் தூக்கி எழுத ஒரு கட்டாயம்

இயல்பு மாற்றம் கொஞ்சம் கடினமே

இயல்பு மாற்றம் யாவர்க்கும் கடினமா?
தலைப்பு ஒன்றை பற்றி எழுதுவது எனக்கு தகாதா?

பரிசோதிக்க .. . முயற்சிக்கலாம் என முடிவெடுத்தேன் - தலைப்பாய்
" பற்றுதலே வேண்டாம் " என பகர்ந்திட முனைந்தேன்

தலைப்பை தேர்ந்தெடுக்கவே தனிமையை பற்றினேன்
இறைவன் தாளுடன் கூடவே எழுதும் இத்தாளையும் பற்றிட நேர்ந்தது

தலைப்பு ஒன்றை பற்றி எழுத எனக்கு தகாது என்று நிரூபிக்க
தக்க சான்றாய் இவையிங்கு அமைந்தன

என் சுயமும் , சுயநலமும் கொஞ்சமும் குறைந்த பாடில்லை
எந்த ஒரு பொது நலனும் சுயநலம் இல்லாமல் அமைய முடியாதென
சமாதானம் சொல்லி முடிவெடுத்தேன்

படிக்கும் மக்களை மனதில் பற்றி - இனி
பற்றுதலே வேண்டாம் - தலைப்பை
பற்றுதலே வேண்டாம் என .. :-)

Monday, April 6, 2009

மழை ஈரம்

வறண்ட விருட்சங்கள் எல்லாம்
புது பொலிவு பெற
பெய்யும் மழையில்
இறங்கி நடக்கிறேன்

பள்ளிக் காலம் முதல்
இன்றைய
பணியின் கோலம் வரை
எல்லா கதையும் பேசி முடிக்கிறேன்

உன் சிறு பிராயம் போலவே
கைப்பிடித்து நான் நலமாய்
வீட்டின் உள் சேர்ந்ததும்
விடை பெற்று செல்கிறாய்

நான்
உலர்ந்த ஆடைக்கு
மாறி
கொண்டிருக்கிறேன்

Saturday, April 4, 2009

வாக்கு மூலம்

நேரம்
அதிகமில்லை

வேகமாக
அடைய வேண்டிய இலக்கு

எல்லை கோட்டை
தொட
முயற்சி

சக பயணியின்
எண்ணங்கள்
அலட்சியப்படுத்த பட்டு
மிக விரைவான பயணம்

எல்லை கடந்த
மகிழ்ச்சி

வெற்றி பெருமிதத்தில்
மிதந்து எழுகையில்
கையினில் ரத்தக்கறை

எவரின் மன புண்ணின் கசிவோ
ஜெயித்த எனக்கு
தெரிந்திருக்க
வாய்ப்பு இல்லை.

Tuesday, March 24, 2009

அறிவின் தெளிவு பெற ஆத்திச்சூடி

டக்கமெனும் உயர்பண்பு கொண்டு
ண்மையெனும் தந்நிலை உணர்ந்து
ந்நிலையில் தன் கடமை எது என தெரிந்து
கையாய் கல்வியை குருவிடம் பெற்று
ள்ளம் மகிழ்வுற உயர் அறிவில் தெளிந்து
க்கம் மிகுந்து உயர்வு தன் வசப்பட
ந்த எண்ணம் தன் உள்ளத்தெழுந்தாலும்
ன் எதற்கு என்று எதையும் ஆராய்ந்து
ந்து புலன்களிலே அறிவை அலைய விடாது
ன்றே தன் குறிக்கோள் என்று
துவது தான் உயர்வை அளிக்கும் - இம்மொழி
டதமாய் இருந்தாலும் மனதுள் கொள்க
தே வாழ்தலுக்கு உயர்வென்க!

Monday, March 23, 2009

அத்துமீறிய ஊடுறுவல்

அதிகாலை
ஜன்னலை மெதுவாய் திறந்தேன்

தென்றல்
வீசியது

மெலிதாய்
புன்னகைத்து
அடுப்பில்
நீர் ஏற்றினேன்

புயலின் துணை கொண்டு
தென்றல் கதவை உடைத்து
உள் நுழைந்தது

உலையில் கொதித்து
அடங்கியது சாதம்
மதிய உணவுக்காய்
எடுத்து கட்டி வைத்தேன்

எஞ்சியது இரவுக்கும்
தொடரலாம்

Saturday, March 21, 2009

மெல்ல திறந்தது கதவுPeter.. Jackie.. Paula.. Chitra..
Status..Meeting.. Tax.. Stock.. Visa ..

இவற்றிற்கு இடையில்
என் நலம் விசாரித்த ஒரு வார்த்தை
எனக்கும் உயிர் இருப்பதாய் உணர்ந்தேன்.
மெல்ல திறந்தது கதவு ..

நலமா??

ஆனால் இன்று அந்த விசாரிப்பும்
ஓர் அன்றாட வழக்கமாய் விட்டது
தன் தனித்துவத்தை இழந்து..

நலமா என்றால் நலம் என்ற பதிலை மட்டுமே
எதிர்பார்க்கும் மனிதர்களிடம்
என் நலத்தை சொன்னால் என்ன
சொல்லாமல் விட்டால் என்ன ?..

மெல்ல திறந்தது கதவு ..

தனித்துவம்

தனித்துவமாய் விளங்கும் பெருமை
என்றும் தத்துவங்களுக்கே உண்டு
ஆனால்..
இன்று தத்துவங்களுமே கேலிக்குறிய பொருளாய்

தத்துவங்களுக்கே இல்லாத தனித்துவம் எங்கோ
தனக்கு மட்டும் இருப்பதாய் கற்பனையில் நான்

மெல்ல திறந்தது கதவு ..

கற்பனை

கற்பனையில்லாத மனித வாழ்வு இல்லை
மண்ணுக்குள் போகும் மனிதனை சற்று
விண்ணையும் எட்டிப் பார்க்க வைத்தது கற்பனைதான்

மெல்ல திறந்தது கதவு ..

மனிதன்

பெயர்க்காரணம் சொல்ல முடியாத அளவுக்கு
அழிந்து போனவைகளில் இன்னும்
அக்கரைக்கும் இக்கரைக்கும் அல்லாடி
கொண்டிருக்கும் மனிதம்..

மெல்ல திறந்தது கதவு ..

அழிவு

சரிந்து விழுவதை அழிவு என்றால்
அருவியின் பெருமை எங்கே எடுத்துச் சொல்ல

மெல்ல திறந்தது கதவு ..

பெருமை

பிறப்பு முதல் இறப்பு வரை
பணத்திற்கு போட்டியாக தேடப்படும்
மற்றொரு ஆசைப் பொருள் தான் இந்த பெருமையோ?

மெல்ல திறந்தது கதவு ..

பொருள்

பொருளைத் தேடித்தான் மனித வாழ்க்கையே
அது பொருள் பொதிந்த தேடலா என்பதே கேள்வி

மெல்ல திறந்தது கதவு ..

தேடல்

அனைவரும் கடந்து வந்த பாதைதான் இத்தேடல்
அதற்கு எழுதும் இவ்வரிகளே சாட்சி..

அத்தேடலின் முடிவு.....??

கதவுகள் ஏனோ மெல்லத்தான் திறக்கின்றன... :-)

Tuesday, March 17, 2009

ஜீரணம்


வர வர
வாழ்க்கையில்
நோய் எதிர்ப்பு சக்தி
குறைந்து விட்டது !


இப்பொழுதெல்லாம்..

வார்த்தைகளே
ஆனாலும் கூட

வடிகட்டாமல்

ஜீரணிக்க முடிவதில்லை..புரிந்ததும் புரியாததும் ..


இந்த ஓட்டம் தேவையா?

என்றோ படித்த 10 - ஆம் வகுப்பு பாடம் ஒன்று நினைவிற்கு வருகிறது..

உலகமே ஒரு ஓட்டப்பந்தயம் நடக்கும் இடம் போன்றது. இங்கு எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். கால் இருப்பவனும் இல்லாதவனும் .. அனைவரும் ஓடி கொண்டிருக்கிறோம் .. ஓட முடியாதவர்கள் தன்னால் ஓட இயலவில்லையே என்று ஏங்கி கொண்டும்.. கொஞ்சம் மெதுவாக ஓடுகிறவர்கள் .. தன்னைத்தாண்டி ஓடுகிறவனை போல் தானும் ஓட வில்லையே என்றும் ... முதலில் ஓடுகிறவன் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள இன்னும் வேகமாய் ஓடிக் கொண்டும் இருக்கிறான்.. என்று வரும்.. ( கலப்படத்துடன் தான் எழுதி உள்ளேன் .. பாடபுத்தகத்தின் சரியான வரிகளின் தேடலில் நான்... )

அன்று படிக்கும் பொழுது.. அம்மா மீண்டும் மீண்டும் அதை சொல்லும் படி ரசித்து கேட்பாள். எனக்கு பல கோணங்களில் புரிந்து கொள்ள இயலாத அச்சமயம் .. கருத்து மனதில் தெளிவாய் பதியாவிட்டாலும்.. என் நினைவாற்றலின் சவாலை எதிர்கொள்ளும் பொறுப்புணர்வுடன் நானும் சொல்வேன்...

இன்று புரிகிறது.. பல்வேறு சிந்தனையின் இடையில்.. இந்த "ஓட்டம் தேவையா?"என்ற கேள்விக்கு பதில் தேடும் போது.. அம்மா மீண்டும் மீண்டும் இதை சொல்ல வைத்து ரசித்ததின் அர்த்தம்....

இன்றும் புரியவில்லை அம்மாவும் "ஓட்டம் தேவையா ?" என்ற கேள்விக்கு பதில் தேடி இன்றும் என்னைப்போல் ஓடிக்கொண்டுதான் இருக்கிறாளா.. என்று..


தேடலில் கிடைத்தது... <http://www.textbooksonline.tn.nic.in/Std10.htm>>


Sunday, March 15, 2009

வீட்டிற்கு வெளியே பனி


வீட்டை புதிதாக்க ஒட்டடை அடித்து வெள்ளைப் பூச்சு
என்ன.. .
ஒட்டடை எது என்ற அறியாமை
விளைவு மொட்டையாயின மரங்கள்
வேர் பிடிங்கி பார்த்து நீர் ஊற்றிய குரங்காய் இயற்கை!


விதை : 2005- ல் நான் பார்த்த முதல் பனி..நிலைப்பாடு


வாரம் முழுதும் அலுவலக பணிகளில் மூழ்கி ...
அவ்வப்போது வெளிவந்து என் இருப்பை உணர்த்தி
முழுமை இல்லாமலே செல்கிறேன்....

என் இருப்பு பிறரால் அறியப்படும் தருணம் மகிழ்வைத்தந்தாலும்
மீண்டும் இருப்பை அவர் பரிசோதிக்கும் தருணம்
இருந்த என் இருப்பும் சூன்யமாய்..

இருக்கிறேன் என்று சிறு அசைவால் சொல்வதை தவிர
இருந்து அவர்க்காய் என்ன செய்கிறேன் என்பது புரியவில்லை

வற்றா இருப்பு நிலை எங்கும் நிறைந்து இருப்பதை உணர்ந்தால்தானே பேரின்பம்
பிறர் உணருமாறு என் இருப்பு இல்லாமல் போனால் விளைவுகள் அறிந்ததே!

எந்நேரமும் அலுவல்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்
எனக்காய்.. நான் செய்ய எண்ணும் செயலுக்காய்...
நேரம் ஒதுக்க முயல்கிறேன் ..

கிடைக்கும் சில நிமிடங்களில் முழுவதுமாய்
வாழ்ந்து அனுபவித்து பேரின்பம் அடைகிறேன்

சில நிமிடங்கள் என்பது மிக குறைவாய் பிறருக்கு தெரிந்தாலும்
எனக்கு நொடிகளில் 60 - ன் மடங்காய் தெரிவது இறைவன் எனக்களித்த வரம்

என் மனம் அமைதியாய் .. நிறைவாய் ஆக
வாரம் ஒரு மணி நேரம் கிடைத்தால் போதும்

என் சுற்றி உள்ளவர்களின் மனோநிலை அறிந்தும்
புன்னகையோ சிறு அசைவோ தவிர
எதுவும் தர முடியவில்லை என்ற எண்ணம் தான் ...
சில நேரம் சமன் நிலையில் இருந்து
என்னை கீழ் தள்ளுகிறது.. மற்றபடி..
நான் நலமே !!!

Monday, March 9, 2009

நடை மேடை


தலை வலி ... வெளியில் .. தனியாக
இயற்கையுடன் இணைந்து நடக்க விருப்பம் கொண்டேன்

தனியாக இணைந்தா.. என முரண்பாடு நினைத்து புன்னகைத்த போது
நடப்பது என்பதை மட்டுமே அழுத்தமாய் நான் வெளிப்படுத்தியது உறைத்தது

"வெளி" என்பதோ "தனி" என்பதோ அர்த்தமற்றதாய் ..

பாடம் 1:
உரைக்கும் முன் உறைத்திருக்க வேண்டியது.... :-)


அமைதியாய் இறுக்கங்கள் எல்லாம்
ஒவ்வொன்றாய் அகல விருப்பம் கொண்டேன்
இறுக்கம் இன்னும் உச்ச கட்டம் கொள்ளாமல் இருக்க
இறைவனை துணைக்கு அழைத்தேன்

வல்லவன் அவன் இருக்க என்ன குறை?
இறுக்கம் குறைந்தது உணர்ந்தேன் .

"தனக்கு" என்பதோ "குறை" என்பதோ அர்த்தமற்றதாய் ....

பாடம் 2:
அழைக்கும் முன் அறிந்திருக்க வேண்டியது.... :-)

இறுக்கங்கள் தாக்காது இயல்பாய் இருக்க முயன்றேன்
இறுக்கம் எல்லை மீறி வெளி வராமல் இருக்க ப்ரார்த்தித்தேன்.

முடிந்தது ... முயற்சி திருவினையாக்கும் அல்லவா?
"என்னை" என்பதோ "எல்லை" என்பதோ அர்த்தமற்றதாய்...

பாடம் 3:
ப்ரார்த்திக்கும் முன் மனதில் பதித்திருக்க வேண்டியது

இறுக்கங்கள் மாறவில்லை எனினும் இயல்பு நிலையும் மாறவில்லை
சூழ்நிலை தாக்கத்தால் பழகிய பாரதியுடன் பேசி தெளிந்தேன்
அதிகமாய் உணவை உள் இழுக்காமல் அமைதியாய் இருந்தேன்

"தன்னியல்பு" என்பதோ "அமைதி" என்பதோ
அர்த்தமற்றதாய்...

பாடம் 4:
கலங்கும் முன்னே தெரிந்து தெளிந்திருக்க வேண்டியது.. :-)

அனுபவ பாடங்கள் இப்போது கைகொடுக்க
மனதை அறிந்து அழைத்து உறைத்து உணர்ந்து உரைத்தேன்
தெரிந்து தெளிந்ததனால் நடக்க தலைப்பட்டேன்

"வெளி" யில் "தனி" யாக "தனக்கு" மட்டுமே சாம்ராஜ்யம் வகுத்துக் கொண்டு
"குறை" இல்லாமல் "என்னை " ஆட்சி செய்த
"எல்லை" அற்ற "அமைதி" யுடன்
"தன்னியல்பு" காட்டி சிரித்தது நிலா

எல்லாம் "அர்த்தமாக" இயற்கையுடன் நடை மேடையில் இணைந்தேன் !!


எண்ணமே செயல்நான் மட்டுமல்ல .... நம்மில் பலரும் எண்ணியிருக்கக்கூடும்

காலை குளியல் 10 நிமிடம்.. சரி பரவாயில்லை
சமைக்க .. காலை உணவை படைத்தவனுக்கு படைக்க முழுதாய் 30 நிமிடம்
தலை வாரி தயாராக 5 நிமிடம்
8:40 பஸ் பிடிக்க அரக்க பரக்க ஓட்டம்

2 மணி நேரம் முழுதாய் மீட்டிங்
மீட்டிங் இடையில் பாதி உண்டு முடித்த உணவை
முழுதாய் உட்கொள்ள 10 நிமிடம் மிக அதிகம்
5:20 பஸ் பிடிக்க 5 நிமிடம் தான் பாக்கி

வீடு வந்து , சில நேரம் வீட்டு அலுவல்களும்
பல நேரம் அலுவலக பணியுமாய்
உண்டு , உறங்கி , பின் எழ
மீண்டும் குளிக்க .. பத்தே நிமிடம்

அட ஒரு
10 நிமிடம் அதிகம் கிடைத்திருந்தால்....
ஒரு
5நிமிடம் முன்னால் வந்து இருந்தால்....

நான் மட்டுமல்ல .... நம்மில் பலரும் எண்ணியிருக்கக்கூடும்
என்றோ , எங்கோ , ஒரு முறையேனும்

மனிதன் வரையறுத்ததுதான் என்றாலும் - மணியை
மாற்றி அமைக்க முடிவதில்லை.

வார்த்தை தடித்து , வரம்பு மீறும் பொழுது
வாழ்ந்த அந்நொடிகள் மீண்டும் நம் வசம் வந்தால்...

விளைவுக்காய் காத்திருக்கும் , எதிர்பார்ப்பின் உச்சத்தில்
எட்டடிக்கும் கடியாரம் மாறி மணி பத்தென்றால்...

நான் மட்டுமல்ல .... நம்மில் பலரும் எண்ணியிருக்கக்கூடும்
என்றோ, எங்கோ , ஒரு முறையேனும்

எங்கெங்கிருந்தோ கிளர்ந்தெழுந்த எண்ண அலை
Benjamin Franklin வழியாய் Daylight saving

முழுதாய் ஒரு மணி நேரம் காணாமல் போவதற்கும்
மீண்டும் 60 நிமிடம்
முழுதாய் வாழ்வதற்கும் :-)

Friday, February 27, 2009

என் கவிதை தோழி


உன் நண்பர்கள் யார் என்று சொல் ... உன்னை பற்றி நான் சொல்கிறேன் .....

என் கவிதை தோழி....

எழுந்து வரும் வேகத்தை எரிச்சலாய் காட்டாமல்
எழுதும் இப்பேனா முனையால் எதிர்கொள்ள கற்றுக்கொண்டேன்


தேர்ந்தெடுத்த இவ்வழி தெளிவால் பிறந்த வழி
இவ்வழியின் மகத்துவத்தை தெரிவிக்க வார்த்தையில்லை

என் வழிதான் சிறந்ததென நிரூபிக்க இஷ்டமில்லை
எதிர்படும் நிகழ்வுகளின் தாக்கம் தாளவில்லை

இன்பமோ துன்பமோ நன்மையோ தீமையோ
இலாபமோ நஷ்டமோ வாழ்வோ தாழ்வோ
என் எல்லா உணர்வையும் மதிக்கும் என் உயிர்த்தோழி
என்னையே அறிந்து கொள்ள உதவும் ஓர் கண்ணாடி

ஆத்திரத்தை அறிவிக்கும் அழகிழந்த வார்த்தையெல்லாம்
கோர்க்க முனைகையிலே கும்பிட்டு பின் வாங்கும்
வார்த்தைகளின் வெளிப்பாடு உணர்ச்சிகளைத் தாக்காமல்
உள்ளார்ந்த அறிவின் உயரத்தைத் தொட்டு வரும்

மெல்ல, எழும் வார்த்தைகளை மெருகேற்ற முற்பட்டால்
ஆத்திரம் குறைந்து தானாய் அழகுணர்வு வந்துவிடும்
எழுதுகின்ற எனக்கோ இன்பத்தை அள்ளித்தரும்
என்னாலும் முடியுமென்ற எழுச்சியை வென்று தரும்


இத்தனையும் செய்கின்ற என் கவிதைத் தோழிக்காய்
இறைவா உன்னிடம் என் மன்றாட்டு
உலகம் உள்ளளவும் இந்த உயிர்ப்பிணைப்பை
என்றென்றும் உறுதியாக்கிக் காப்பாற்று !